அருப்புக்கோட்டை, ஜூன் 13: அருப்புக்கோட்டையில் உலக குழந்தை தொழிலாளர்கள் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. உலக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அருப்புக்கோட்டை வட்ட சட்ட பணிகள் குழு மற்றும் விருதுநகர் மாவட்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை இணைந்து அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி சதீஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆனந்தவள்ளி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயபிரதா, வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் லாவண்யா, பாலாஜி, வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், மூத்த வழக்கறிஞர்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆய்வாளர் உமா மகேஸ்வரன் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.