தேனி, ஆக. 5: அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இடஒதுக்கீடு அளித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை வரவேற்று தேனியில் ஆதித் தமிழர் பேரவையினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழ்நாடு முதல்வராக கலைஞர் இருந்தபோது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மொத்த இடஒதுக்கீட்டில் 3 சதவீதத்தை அருந்ததியர் இன மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தார். இதனைஎதிர்த்து சில அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் அருந்ததியர்களுக்கு ஒதுக்கிய 3 சதவீத உள் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து, நேற்று முன் தினம் தேனி நகரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் நீலக்கணலன் தலைமை வகித்தார். தேனி நகரத் தலைவர் நாச்சியம்மாள், மாவட்ட நிதி செயலாளர் சரிதா, மாவட்ட மாணவரணி தலைவர் சந்துரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.