அரியலூர், ஜூன் 13: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை கலெக்டர் ரத்தினசாமி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி மற்றும் வாக்காளர் தாம் பதிவு செய்த வாக்கினை உறுதி செய்யும் கருவிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நேற்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ரத்தினசாமி காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த வைப்பறையில் 2320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (747 பேலட் இயந்திரங்கள், 787 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 786 விவிபாட் இயந்திரங்கள்) இருப்பதை உறுதி செய்தார்.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.