அரியலூர், நவ.12: அரியலூர் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள், ஓய்வூதியம் தொடர்பான சிறப்பு முகாம் வரும் 14ம் தேதி நடக்கிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு;ஸ்பர்ஸ் (SPARSH) மூலம் பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் (தரைப்படை, கடற்படை, விமானப்படை) மற்றும் சார்ந்தோர்கள் தங்களது வாழ்நாள் சான்று சமர்ப்பிப்பதில் ஏற்படும் இன்னல்கள் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த குறைகளை நிவர்த்தி செய்ய சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் (CDA, Chennai) அலுவலகத்தின் சார்பாக ஸ்பர்ஸ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன், IDAS தலைமையில் நடைபெறுகிறது.
இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். உயிர்சான்று அளிக்க இயலாதோர் மற்றும் தவறியோர் அதனை டிஜிட்டல் முறையில் அளித்திட முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் தொடர்பான அனைத்து குறைபாடுகளுக்கும் இம்முகாமில் தீர்வு காணப்படும். ஓர் ரேங்க் ஓர் பென்சன் (OROP) ஓய்வூதியம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவர்த்தி செய்யப்படும். மேலும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களின் ஆதார் விபரங்களை ஸ்பர்சில் பதிவு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தின் எதிரில் உள்ள இராமசாமி திருமண மண்டபத்தில் நவம்பர் 14 (வியாழன்) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெறும் இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்கள் தங்களது படைப்பணிச்சான்று, ஓய்வூதிய கொடுப்பாணை, அடையாள அட்டை, பான்கார்டு மற்றும் வங்கிகணக்கு புத்தகத்துடன் நேரில் ஆஜராகி இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.