அரியலூர்,நவ.19: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள சிறப்பு பிரிவுகளில் திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அரியலூர் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா முன்னிலையில், தனிப்பிரிவு, இணைய குற்றப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, மற்றும் மாவட்ட குற்ற பதிவேடுகள் பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொண்டார். குற்ற பதிவேடுகள் கூடத்தில் பராமரிக்கபடுகின்ற சாலை விபத்துக்கள் எண்ணிக்கை, அதில் ஏற்படும் உயிரிழப்புகள், காயங்கள், போக்குவரத்து விதி மீறிய குற்றவழக்குகள் குறித்து ஐஜி கார்த்திகேயன் கேட்றிந்தார். மேலும் மாவட்டத்தில் நடக்கும் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள், அவற்றில் ஏற்படும் இழப்புகள், மீட்கப்பட்ட விவரங்கள், கொலை எண்ணிக்கை, அதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவரங்கள், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது குறித்து ஆய்வு செய்தார்.
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்றது, கள்ளச்சாராய விற்பனை, சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை வாங்கி விற்பது, அவற்றில் பறிமுதல் செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட விவரங்கள், தடை செய்யப்பட்ட லாட்டரி வழக்கு, போக்சோ வழக்குகள், மற்றும் குற்ற வழக்குகளிலும், மது வழக்குகளிலும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கைகள் குறித்து ஐஜி கேட்டறிந்தார். மேலும் சைபர் கிரைம் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு வழக்கு எண்ணிக்கை விபரங்கள் குறித்து ஆய்வு செய்ததோடு, அவற்றை பராமரிக்க தேவையான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார். இதனையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறையினையும் பார்வையிட்டார்.