அரியலூர்,மே 20: அரியலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை-2025 முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகார அமைப்புக் கூட்டம், மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, தலைமையில் ேநற்று (19.05.2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது: நடப்பு ஆண்டிற்கான முதல் நிலை மீட்பாளர்கள், எண்சிசி, எண்எஸ்எஸ், சாரணர், எண்ஓய்கே, ஊர்க்காவல் படையினர் போன்ற தன்னார்வலர்களின் விவரங்களை புதுப்பித்திடவும், மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் தொடர்பு உபகரணங்களான தொலைபேசி, செயற்கைக்கோள் தொலைபேசி, ஏர்கு கருவிகள் ஆகியவை மின்கல சேமிப்பு வசதியுடன் சரியாக வேலை செய்வதை உறுதி செய்திடவும், நிவாரண முகாம்களில் மின்வசதி, உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திடவும் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பு மற்றும் மீட்பு உபகரணங்களான கனரக வாகனங்கள், மோட்டார்பம்புகள், ஜேசிபி, கிரேன்கள், மரம் அறுக்கும் கருவிகள், படகுகள் தயார்நிலையில் வைத்திடவும், சேத மதிப்பீட்டினை விரைவாக மேற்கொண்டு நிவாரண உதவிகள் உடன் வழங்கிடவும், பேரிடர்களிலிருந்து மீட்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட மாதிரி பயிற்சிகள் நடத்திடவும், முதல் நிலை மீட்பாளர்களுக்கான பயிற்சிகள் அளித்திடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டிற்கு பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் மற்றும் நிவாரண மையங்கள் கண்டறிந்திடவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கான வரைபடங்கள் தயார்செய்திடவும் , மாநில பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற காவலர்களை தயார்நிலையில் வைத்திடவும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் பொது விநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்களை 2 மாதங்கள் இருப்பு வைத்திருக்கவும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும், போதுமான மருந்துகள் தயார்நிலையில் இருப்பு வைத்திருக்கவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாவட்டத்திலுள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவும் ஏரி, மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரப்படவும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் கழிவுநீர்வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர்வடிகால் வசதி ஏற்படுத்திடவும் தெரிவிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாலங்களின் இருபுறமும் மழைநீர்எளிதாக செல்லும் வண்ணம் அடைப்புகள் சுத்தம் செய்திடவும் போதுமான அளவில் மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு குச்சிகள் தேவைப்படும் இடங்களில் முன்கூட்டியே இருப்பு வைத்திடவும் தெரிவிக்கப்பட்டது. பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார்நிலையில் வைத்திடவும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திடவும் , மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் கம்பிகளை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், தென்மேற்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் இயங்கிவருகிறது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கும், வாட்ஸ்அப் மூலம் 9384056231 என்ற எண்ணிற்கும் தகவல், புகார் தெரிவித்திட மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்கள். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ்செல்வன், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) முனைவர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.