அரியலூர்,செப்.20: அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் பற்றிய தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்ணை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டிஜிபி வன்னியபெருமாள் உத்தரவுப்படி ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தினந்தோறும் வாகன சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. திருச்சி மண்டல எஸ்பி சுஜாதா மேற்பார்வையில் அரியலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது பொதுமக்களிடையே ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது தகவல்கள் தெரிவிக்கும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இலவச தொலைபேசி எண் 1800 599 5950 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த தொலைபேசி எண்ணை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அரியலூர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இலவச தொலைபேசி எண்ணுடன் போஸ்டர்கள் பொதுமக்கள் பார்வையில் படும் பகுதிகளான பஸ் ஸ்டாப், ரேஷன் கடைகள், பஞ்சாயத்து அலுவலகம், டோல்கேட் மற்றும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் ஒட்டி விழிப்புணர்வு செய்து வருகின்றனர். ரேஷன் பொருட்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என அரியலூர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.