அரியலூர் ஜூன் 7: அரியலூர் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மின்நகர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி, முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரியலூர் பேருந்து நிலையம் சுமார் 42 வருடங்களுக்கு மேல் ஆனதாலும், பயன்படுத்த இயலாத நிலையில் இருந்ததன் காரணமாக தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி பொதுமக்களின் நலன் கருதி புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டது.அதன்படி புதிய பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் முதற்கட்டமாக உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ.7.80 கோடி மதிப்பீட்டில் 21 பேருந்து நிறுத்த தடங்கள், 30 கடைகள், நிர்வாக அறை, உணவகம், நேரக்கட்டுப்பாட்டு அறை,
டிக்கெட் புக்கிங் கவுண்டர், ஏடிஎம் அறை, போக்குவரத்து துறை அலுவலக அறை, எலக்ட்ரிக்கல் அறை, பாதுகாப்பு அறை, கட்டுப்பாட்டு அறை, கழிவறை உள்ளிட்ட பணிகளும், இரண்டாம் கட்டமாக மூலதன மான்யநிதி 2023-24 திட்டத்தின் கீழ் ரு.3.78 கோடி மதிப்பீட்டில் 6 பேருந்து நிறுத்த தடங்கள், 15 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, நேரக்கட்டுப்பாட்டு அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கழிவறைகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நேற்று நகராட்சி நிர்வாக இயக்குநர் நேரில் பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளின் விவரம் குறித்து ஆய்வு செய்ததுடன், முதற்கட்ட பணிகளில் எஞ்சியுள்ள பணிகளான பேருந்து நிறுத்தம் இடம், நிழற்குடை, மின்பணிகள்,
குடிநீர் மற்றும் தண்ணீர் வசதிகள், சாலை மற்றும் வண்ணப்பூச்சு ஆகிய பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திடவும், இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் பணிகளிலும் எஞ்சியுள்ள பணிகளை விரைவாக உரிய காலத்திற்குள் முடித்திட சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார் முன்னதாக, அரியலூர் நகராட்சி மின்நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தில் ரூ.18.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணிகள் மற்றும் வீட்டு குடிநீர் இணைப்பு பணிகளை பார்வையிட்டு முடிவுற்ற பணிகள் மற்றும் எஞ்சியுள்ள பணிகளின் விவரம், கட்டுமானப் பொருட்களின் தரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மல்லிகா, தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் தாணுமூர்த்தி, தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் லோகநாதன், அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், அரியலூர் நகராட்சி ஆணையர் அசோக்குமார், அரியலூர் நகராட்சி பொறியாளர் விஜயகார்த்திக், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.