பெரம்பலூர், ஆக.27: கோயம்புத்தூரில் முதன் முறையாக கேலக்சி ரோட்டரி கிளப் நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தியன் பாரா கிரிக்கெட் லீக் தொடர், நேரடி ஒளிபரப்புடன் வருகிற செப்டம்பர் 6 முதல் 8 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் தண்டர் வாரியர்ஸ், கேலக்சி ஜெயின்ட்ஸ், மைட்டி மார்விக்ஸ், ரேஞ்ஜிங் ரைனோஸ் போன்ற 4 அணிக்கான கிரிக்கெட் வீர்ர்களின் தேர்வு இந்தியா முழுவதும் நடந்தது.
தேர்வுக் குழுவின் தலைவராக அரியலுாரைச் சேர்ந்த வெங்கடேஷ், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஜெய்கிஷோர், துணைத் தலைவராகவும், உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் குப்தா தேர்வுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டனர். 11 மாநிலங்களில் நடந்தத் தேர்வுகளின் அடிப் படையில் இந்தத் தொடருக்கு தேர்வான வீரர்களின் பட்டியல் வெளியானது. இதில், தமிழகத்திலிருந்து 22 வீர்ர்கள் தேர்வாகி உள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர், தோப்புத் தெருவைச்சேர்ந்த வீரர் ஷேக் முகமது (29) என்பவர் தேர்வாகியுள்ளார். ஷேக் முகமது மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணி அணியில் விளையாடி வருகிறார்.
மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் நடந்த கிரிக்கெட் தொடரில் ஆட்டநாயகன் விருதும், தொடர் ஆட்டநாயகன் விருதும் பெற்றுள்ளார். மேலும், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி அணிகளுக்கு இடையே யான டி20 தொடரில் விளையாட இருக்கின்ற தமிழ்நாடு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியியிலும் விளையாட ஷேக்முகமது தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.