அரியலூர், ஆக. 30: அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி, வெளியிட்டார். இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2025-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன் முதன்மை பணியாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் நேற்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக வெளியிடப்பட்டது.
அதன்படி 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,60,185 வாக்காளர்களுக்கு 306 வாக்குச்சாவடிகளும் (Polling Stations), 199 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations), 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,58,532 வாக்காளர்களுக்கு 290 வாக்குச்சாவடிகளும் (Polling Stations), 160 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations) என மொத்தம் 5,18,717 வாக்காளர்களுக்கு 596 வாக்குச்சாவடிகளும் (Polling Stations), 359 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations) வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட 596 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி இடம்மாற்றம், வாக்குச்சாவடி பெயர் மாற்றம், வாக்குச்சாவடி கட்டிட மாற்றம், இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கும் மேல் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ளது மற்றும் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்தல் தொடர்பாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அவற்றினை செப்டம்பர் 5 -க்குள் சம்மந்தப்பட்ட உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் எழுத்து பூர்வமாக தகவல் தெரிவிக்கலாம்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், பொதுமக்கள், குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பிறவழிகளில் வரப்பெறும் மனுக்களை பரிசீலனை செய்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கூட்டம் நடத்தியும் இறுதி வாக்குச்சாவடி பட்டியல் தயார் செய்யப்பட்டு அக்டோபர் 29 அன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலுடன் இணைத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்படும் என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
01.01.2025 நாளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தபணியின் முன் திருத்த பணியாக வாக்காளர் விவரங்களை வீடு வீடாக சரிபார்க்கும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேற்க்கண்ட பணிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தேர்தல் ஆணையம் இளம் வாக்காளர்களை அதிகஅளவில் பதிவு செய்திட ஏதுவாக 01.01.2025, 01.04.2025, 01.07.2025 மற்றும் 01.10.2025 ஆகிய நாட்களையும் தகுதி ஏற்பு நாளாக கணிக்கிட்டு பொதுமக்களிடமிருந்து படிவத்தினை பெற்று வாக்காளர் பட்டியல் தயார் செய்ய ஆணையிட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இளம் வாக்காளர்கள் தங்களை வாக்காளர்களாக இணைத்துக்கொள்ள http://www.voters.eci.gov.in/என்ற இணையதள முகவரியிலும் மற்றும் Voters Helpline App-யிலும் விண்ணப்பம் தாக்கல் செய்துகொள்ளலாம் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது. இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம், ஆர்டிஓக்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.