அரியலூர், ஜூன் 13: அரியலூர் நகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நகராட்சி முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் நகராட்சி பெரியார் நகரில் உள்ள தெருக்களில் போடப்பட்ட சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக இருப்பதால், அவ்வழியாக நடந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும், தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. மண் சாலைகளில் களிமண் அதிகம் இருப்பதால் சிலர் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர்.
இதே போல், இவ்வழியாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் அதிகம் உண்டு. இந்த பெரியார் நகரில் அரசு அலுவலர்கள் பலர் இருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, இந்த சாலைகளை விரைவில் சீரமைத்து தருவதோடு, மண் சாலைகளை மெட்டல் சாலையாக தரம் உயர்த்தி தர வேண்டும் என பெரியார் நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.