அரியலூர், ஜூன் 4: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 29ம் தேதி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், காவல் துறையினர் திருமானூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது 1.05 கிலோ அளவிலான கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த நபரை பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதே போல், கிரைம் டீம் உதவி ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான காவல்துறையினர் கீழப்பழூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது,
விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கையும் களவுமாக பிடித்து அவரிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததற்காக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும், அரியலூர் மற்றும் மீன்சுருட்டி பகுதிகளில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய உதவிய, உதவி ஆய்வாளர்கள் சரவணகுமார், ஆனந்தன் மற்றும் அவர்களின் தலைமையிலான காவலர்களுக்கும், கயர்லாபாத் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற நபரை தீவிர விசாரணையின் மூலம் கண்டுபிடித்த கயர்லாபாத் தனிப்பிரிவு காவலர் முருகானந்தம் அவர்களுக்கும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.