திருமயம்.ஆக.28: அரிமளம் அருகே பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடத்தப்பட்டு தலைவர், உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஒத்தைப்புளிக் குடியிருப்பு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) பெருமாள் தலைமை வகித்தார்.
பார்வையாளர்களாக அனைவருக்கும் கல்வித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரிசுத்தம், அரிமளம் ஒன்றியம் ஆசிரியர் பயிற்றுனர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் குமரேசன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக கவிதா, துணைத் தலைவராக சத்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குழு உறுப்பினர்களாக கீழப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், கணேசன், ஊராட்சி உறுப்பினர், ரேவதி, பள்ளியின் சார்பாக தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பெருமாள், ஆசிரிய உறுப்பினராக சேதுபதிராஜா உள்ளிட்ட 24 பேர் கொண்ட குழு ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது. கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் வளர்ச்சிக்கும் கல்வித்தர மேம்பாட்டிற்கும் ஒருங்கிணைந்து செயல்படுவது என அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் வசந்தகுமார் நன்றி கூறினார்.