நன்றி குங்குமம் டாக்டர்எக்ஸீமா போன்ற சரும நோய் உள்ளவர்களுக்கு, தோல் அரிப்பு ஒரு பெரும் தொல்லை. இதற்கு தற்போது நடைமுறையில் உள்ள சிகிச்சை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சிகிச்சையை, ரோம் நகரிலுள்ள மருத்துவ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.தோலின் மேற்புறத்திலுள்ள சில குறிப்பிட்ட நரம்பு செல்கள் தூண்டப்படுவதால்தான் அந்த இடத்தில் அரிக்கும் உணர்வு ஏற்படுகிறது. இதற்கு ஐரோப்பிய மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், இ.எம்.பி.எல்.,லைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஒளி மூலம் முடுக்கி விடப்படும் மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை ஊசி மூலம் தோலில் செலுத்த வேண்டும்.அப்படி செலுத்தினால் அந்த மருந்து குறிப்பிட்ட நரம்பு; செல்களில் மட்டும் ஒட்டிக்கொள்ளும். பிறகு மருந்து சென்ற இடத்தில் அகச்சிவப்புக் கதிர்களை பாய்ச்சினால், அவை தோலில் ஊடுருவிச் சென்று மருந்தை முடுக்கிவிடும். இதனால் அரிப்புணர்வைத் தரும் நரம்பு செல்கள் தோலின் மேற்பரப்பிலிருந்து பின்வாங்கி விடுவதால் அரிப்பு நின்றுவிடும்.நவீன முறையில் செய்யப்படும் இந்த சிகிச்சையின் அடிப்படையில், எலிகளுக்கு மருந்தை கொடுத்து சோதித்தபோது எக்ஸீமா உள்ள எலிகளுக்கு உடனே அரிப்பு நின்றுவிட்டது. பல மாதங்களுக்கு அரிப்பு ஏதும் இல்லாமல் எலிகளால் ஆரோக்கியமாக இருக்க முடிந்தது. மேலும் நகங்களால் சொறிந்து கொள்வது நின்றதால், அந்த இடத்தில் இருந்த புண்களும் எலிகளுக்கு வேகமாக ஆறிவிட்டன. இது விஞ்ஞானிகளுக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.‘இந்த ஆய்வின் அடுத்த கட்டமாக, மனிதர்களுக்கும் இந்த மருந்துகள் கொடுத்துப் பரிசோதிக்க ரோம் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதுவும் வெற்றிகரமாக அமையும்பட்சத்தில் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இச்சிகிச்சை வரும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது’ என்கிறது ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டிருக்கும் Nature biomedical engineering.– கௌதம்