Wednesday, June 18, 2025
Home மருத்துவம்ஆலோசனை அரிப்பு உணர்த்தும் அறிகுறிகள்

அரிப்பு உணர்த்தும் அறிகுறிகள்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்விழிப்புணர்வுஅரிப்பு என்றதுமே அதை சருமத்தோடு தொடர்புடையதாக நினைத்துப் பார்க்கவே தோன்றும். ஆனால், பலரும் அப்படி சாதாரணமாக நினைக்கிற அரிப்பு, வேறு பெரிய பிரச்னைகளின் அறிகுறியாகவோ, வெளிப்பாடாகவோ இருக்கலாம் என்பதை அறிவீர்களா? அரிப்பு ஏற்பட்டால் கீழ்க்கண்ட விஷயங்களையும் கவனியுங்கள் இனி…உடலின் ஆற்றலைச் சேமிக்கவும், எரிக்கவும் உதவுபவை தைராய்டு சுரப்பிகள். அது சுரப்பதில் சமநிலையின்மை ஏற்படும்போது களைப்பு, பலவீனம், தலை பாரம், உடல் வலி போன்றவை ஏற்படலாம். அதன் தொடர்ச்சியாக உடலில் அரிப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகள் மற்றும் மெனோபாஸ் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமிருக்கும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அரிப்பையும் கட்டுப்படுத்தலாம்.கர்ப்ப காலத்தில் வயிற்றில் தாங்க முடியாத அரிப்பை சந்திப்பார்கள் பெண்கள். உடலானது சருமப் பகுதிக்கு அதிகளவிலான ரத்தத்தை அனுப்புவதாலும் அந்தப் பகுதி சருமம் விரிவடைவதுமே இதற்குக் காரணம். தளர்வான காட்டன் உடைகள் அணிவது, இருமுறை குளிப்பது, மாயிஸ்சரைசிங் லோஷன் தடவுவது போன்றவற்றின் மூலம் இதைக் கட்டுக்குள் வைக்கலாம். அரிப்பு மிகவும் அதிகமானாலோ, கைகளிலும் கால்களிலும் பரவினாலோ அலட்சியம் வேண்டாம். அது கல்லீரல் கோளாறின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதால் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதே பாதுகாப்பானது.நீரிழிவு நோயாளிகள் சந்திக்கிற பல பிரச்னைகளில் அரிப்பும் ஒன்று. சிலர் அரிப்பு என்பதை சர்க்கரை நோயின் அறிகுறி என்றே யோசிக்காமல் அரிப்புக்கான சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டிருப்பார்கள். அரிப்பு தற்காலிகமாக நிற்பதும், மீண்டும் தொடர்வதுமாக இருக்கும். அதற்குள் சர்க்கரையின் அளவு எகிறியிருக்கும். வேறு எதற்கோ, எப்போதோ டெஸ்ட் செய்து பார்க்கும்போதுதான் நீரிழிவு இருப்பதே தெரிய வரும். எனவே, காரணமின்றி திடீர் அரிப்பு இருப்பவர்கள், முதல் வேலையாக சர்க்கரை நோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது அவசியம்.புற்றுநோயாளிகளுக்கும் அரிதாக அரிப்பு வரும். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குளித்து முடித்ததும் இப்படி அரிப்பு வரும். கூடவே களைப்பாகவும் உணர்வார்கள். சுவாசிப்பதில் சிரமத்தை உணர்வார்கள். கணையப் புற்றுநோய் பாதித்தவர்களுக்கும் அரிப்பு என்பது சகஜமாக இருக்கும். இந்த தகவல்களைப் படித்துவிட்டு பயப்படத் தேவையில்லை. அதே நேரம் எல்லா அறிகுறிகளையும் சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தவும் தேவையில்லை.முதுகெலும்பு மற்றும் மூளைப் பகுதியில் கட்டிகள் ஏற்படும்போது அதன் அறிகுறியாக அரிப்பும் வரலாம். ஆங்கிலத்தில் இதை Neuropathic itch என்கிறார்கள். மருத்துவப் பரிசோதனை மட்டுமே இதற்கான சரியான தீர்வைத் தரும்.பக்கவாதத்துக்கும் அரிப்புக்கும்கூட தொடர்புண்டு. பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடும்.மூளை மற்றும் முதுகெலும்புக்கு அருகிலுள்ள கார்னியல் நரம்புகள் பாதிக்கப்பட்டால் தொண்டை, தாடை மற்றும் காதுப் பகுதிகளில் அரிப்பு ஏற்படலாம். இதன் பின்னணி தெரியாமல் பலரும் அரிப்பு தாங்க முடியாமல் சொறிந்து சருமத்தை புண்ணாக்கிக் கொள்வதும் உண்டு.வேறு ஏதோ பிரச்சினைகளுக்காக நீங்கள் எடுத்துக்கொள்கிற மருந்துகளின் பக்கவிளைவாகவும் அரிப்பு இருக்கலாம். சிலவகை ஆன்டிபயாடிக், ஆன்டிஃபங்கல் மருந்துகள், மலேரியா மருந்துகள் மற்றும் வலி நிவாரணிகள் அரிப்பை ஏற்படுத்தலாம். மாத்திரைகள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்த பிறகு அரிப்பு ஏற்பட்டதாக உணர்ந்தால் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சருமத்தில் அரிப்பு இருக்கும். ரத்த சோகை இருந்தால் களைப்பாக உணர்வார்கள். தூக்கம் வரும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். சருமம் வெளிறிப் போவதுடன் அரிப்பும் இருக்கும். ரத்தப் பரிசோதனையின் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைத் தெரிந்துகொண்டு, அது குறைவாக இருக்கும்பட்சத்தில் உணவு மற்றும் சப்ளிமென்ட் மூலம் சரி செய்ய வேண்டும். சப்ளிமென்ட்டுகளின் மூலம் சரிசெய்வதைவிடவும் சிறந்த வழி இயற்கையாக உணவுகளின் மூலம் சரி செய்வதுதான். அதில் பக்கவிளைவுகள் இருக்காது.டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கும் அரிப்பு இருக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்துகிற சிகிச்சை என்பதால் இந்த சிகிச்சையின் போது உடலின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அல்லது உடல் முழுவதும் அரிப்பு இருக்கும். சருமம் வறண்டுபோகும். அதுவும் அரிப்பை அதிகப்படுத்தும். எனவே, டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்கிறவர்கள் அரிப்பை உணர்ந்தால் மருத்துவரிடம் அது பற்றி ஆலோசிக்கலாம்.ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம் என்றொரு பிரச்னை உண்டு. கால்களில் விவரிக்க முடியாத ஒரு வலி, குறுகுறுப்பு மற்றும் அசவுகரியத்தை உணர்வார்கள். இவர்களுக்கு அரிப்பும் இருக்கும். ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோமுக்கான மருந்துகள் மட்டுமே இந்த அரிப்பையும் கட்டுப்படுத்தும்.மனநிலையில் ஏற்படுகிற மாற்றங்களும், கோளாறுகளும் அரிப்பை ஏற்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? அளவுக்கதிக மன அழுத்தம், மனச்சோர்வு, பதைபதைப்பு போன்றவையும் அரிப்பை ஏற்படுத்தலாம். ஒரே செயலைத் திரும்பத் திரும்பச் செய்கிற Obsessive compulsive disorder பிரச்னை உள்ளவர்களுக்கு இது அதிகமாக இருக்கும். சுத்தம் என்கிற பெயரில் அடிக்கடி கைகளைக் கழுவுவார்கள். அதனால் சருமம் வறண்டு போகும். அரிப்பு அதிகமாகும்.– ராஜி

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi