அரவக்குறிச்சி, ஜூலை 1: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்றுமுதல் முதலாமாண்டு வகுப்புகள் துவங்கியது. புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று (30ம் தேதி) துவங்கியது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்கு முதல் நாள் வருகை தந்த மாணவர்களை இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் வரவேற்றனர். மாணவர்களுடன் பெற்றோர்களும் வருகை தந்தனர். அப்போது மாணவர்களிடைய பேசிய கல்லூரி முதல்வர் வசந்தி, மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் கல்லூரியில் எவ்வாறு செயல்பட வேண்டும் என விளக்கம் அளித்தார். மேலும் கல்லூரியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பம் செய்யாத மாணவர்கள் நேரடியாக கல்லூரி வந்து விண்ணப்பித்து உடனடியாக கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று முதல்வர் வசந்தி தெரிவித்தார்.