அரவக்குறிச்சி, ஜூன் 2: அரவக்குறிச்சியில் 15 வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளது. இந்த 15 வார்டுகளிலும் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும் வார்டுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இரவில் சாலையில் தனியாக செல்லும் போது நாய்கள் சுற்றி வளைத்து கடித்து விடுகின்றன.
இதனால் 10 மணிக்கு மேல் சாலையில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகள், வீட்டில் வளர்க்கும் கோழிகள், அதே போல சிறுவர்கள் ஆகியோர் தனியாக வெளியே நடமாடினால் நாய்கள் சுற்றி வளைத்து கடிக்கின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெருக்களில் சுற்றி திரிந்த நாய்களை பேரூராட்சி நிர்வாகம் மூலம் பிடித்துச் சென்றனர். அதேபோல தற்போது நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் தெரு நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.