சேந்தமங்கலம், ஜூலை 7: சேந்தமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுக்கோம்பை, ராமநாதபுரம்புதூர், வெண்டாங்கி, வாழவந்தி கோப்பை, பள்ளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் அரளி பூச்செடிகளை சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யும் பூக்களை விவசாயிகள் சேலம், நாமக்கல், ஆத்தூர் பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கொல்லிமலை அடிவார பகுதி என்பதால் பூக்கள் பெரிதாகவும், வாசனை அதிகம் இருப்பதால் பல்வேறு பகுதிகளிலிருந்து வியாபாரிகள் நேரடியாக விவசாய தோட்டங்களில் வந்து பூக்களை வாங்கி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக, அரளி பூக்களின் வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரு கிலோ ரூ.300க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நாளுக்கு நாள் பூக்களின் வரத்து அதிகரித்து வருவதால், விலை படிப்படியாக குறைந்து கடந்த வாரம் கிலோ ரூ.220க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதனால் இப்பகுதி விவசாயிகள் கவலையடைந்தனர். தற்போது விலை மெல்ல மெல்ல அதிகரித்து நேற்று ஒரு கிலோ அரளிப்பூ ரூ.360க்கு விற்பனையாகி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லிமலை அடிவார பகுதியில் நல்ல மழை பெய்ததால், பூக்களின் வரத்து அதிகரித்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு, பூக்களின் விலை குறைந்து வந்தது. தற்போது விலை அதிகரித்து வருவதால், விவசாயிகள் பயனடைவார்கள்,’ என்றனர்.