பூந்தமல்லி, அக். 5: அரசு வேலை, கம்பெனி பணம் என 2 மோசடி வழக்குகளில் இருவருக்கு சிறை தண்டனை வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆவடி, மகிழம்பூ தெருவை சேர்ந்தவர் வேலம்மாள்(71), இவரது மருமகளுக்கு தலைமை செயலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக மதுரை திருமங்கலத்தை சேர்ந்த முரளிதரன்(58), என்பவர் ஆசைவார்த்தை கூறி, கடந்த 2010ம் ஆண்டு வேலம்மாளிடம் ₹22 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி அரசு வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், முரளிதரனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் முரளிதரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ₹10,000 அபராதமும், பாதிக்கப்பட்ட நபருக்கு ₹33 லட்சத்து 55 ஆயிரமும் வழங்க வேண்டும் என தீர்ப்பு கூறினார்.
மற்றொரு வழக்கு: அதேபோல், சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் நரசிம்மன்(47), அம்பத்தூரில் உள்ள இவரது கம்பெனியில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த சுரேஷ்(53) என்பவர் பொருட்களை விற்பனை செய்து கொடுக்கும் வேலை செய்து வந்தார். நிறுவனத்திற்கு சொந்தமான பணம் ₹32 லட்சம் கொடுக்காமல் மோசடி செய்தார். இதுகுறித்து நரசிம்மன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஸ்டாலின் நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் பணம் மோசடி செய்த சுரேசுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும் விதித்தார்.