ஆரணி: ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் மனோகரனிடம் இரும்பேடு அன்னை இந்திரா நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 2025-2026ம் ஆண்டில் எனக்கு அரசால் வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டது. எனவே வீடு கட்டும் பணியை விரைவாக ஆரம்பித்தேன். அப்போது ஊராட்சி செயலாளர் வேலை உத்தரவு நகலை பெற்றுக்கொண்டு எனக்கு பணம் தர வேண்டும் என மிரட்டினார். பின்னர் ரூ.10 ஆயிரம் வாங்கி சென்றார். இரண்டாவது முறையாக ரூ.6 ஆயிரம் வாங்கி சென்றார். அதன்பிறகு வீடு கட்டும்போது, மீண்டும் வந்து அதிகாரிகளுக்கு தர பணம் தேவைப்படுகிறது என கேட்டார்.
நான் சுதாரித்து கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். ஊராட்சி செயலாளர் உங்களை ஏமாற்றும் நோக்கத்தோடு பணம் பறித்துள்ளார், உயர் அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தினர். நான் வறுமையில் இருந்து வருகிறேன். அதனால், ஊராட்சி செயலாளர் என்னிடம் ஏமாற்றி வாங்கிய பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.