விருதுநகர், செப்.22: விருதுநகர் அருகே பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலன் காக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களில் சமுதாய நலன் மற்றும் மாணவர் நலனிற்காக துவக்கப்பட்டுள்ள சிறப்பு திட்டமான எங்கள் பள்ளிமிளிரும் பள்ளி என்ற சிறப்பு திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 37,574 அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.மேற்படி திட்டத்தை பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும்.
பள்ளிகளிடையே பள்ளி வளாகத்தூய்மை, வகுப்பறை தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தன் சுகாதாரம், உடல்நலம், சரிவிகித உணவின் தேவை, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்தல், பள்ளி வளாகத்தில் மரம் நடுதல், பராமரித்தல், பள்ளிகளில் சுகாதாரமான கழிப்பறை வசதி உறுதி செய்தல்,பயன்படாத கழிவு பொருட்களின் மேலாண்மை, காய்கறித்தோட்டம், பயிரிட்ட காய்கறிகளை மதிய உணவுக்கு பயன்படுத்துதல், பள்ளி அருகையில் உள்ள பகுதிகளில் உயிரியல் பல்வகைமையை புரிந்துபேணிக்காத்தல் ஆகியவை திட்ட நோக்கமாகும். அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் சிவசக்தி கணேஷ்குமார், ஜமுனாராணி, வட்டார கல்வி அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.