பாடாலூர், ஏப்.22: ஆலத்தூர் தாலுகா அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசாரம் ஆலத்தூர் தாலுகா பகுதியில் கொளக்காநத்தம், கொளத்தூர், அணைப்பாடி, அயினாபுரம் ஆகிய கிராமங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தின் மூலம் பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி, ஒன்றிய, நகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1 முதல் 3 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் ஏப்ரல் 20-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம், கொளத்தூர், அணைப்பாடி, அயினாபுரம் போன்ற கிராமங்களில் மாவட்ட அளவில் தயார் செய்யப்பட்ட ஒரு வாகனத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தி இந்த வாகனத்தில் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அரசு பள்ளிகளில் குறைவான எண்ணிக்கை உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், குடியிருப்புகள் அதிகம் உள்ள இடங்களில் பிரச்சாரம் செய்தனர். பொதுமக்களுக்கு அரசு பள்ளியை நன்மைகள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசாரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர்கள், சக ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.