ஈரோடு, ஜுன் 30: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில், கலெக்டர் ச.கந்தசாமி நேற்று முன் தினம் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியர் விஜயன் அவரை வரவேற்றார். தொடர்ந்து, பள்ளியில் உள்ள நூலகத்தை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மாணவர்களின் நூலகப் பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, ஒவ்வொரு வகுப்பறையையும் பார்வையிட்டு கல்வி, தொழில் நுட்பங்களை கேட்டறிந்தார். மேலும், வகுப்பறையில் உள்ள ஸ்மார்ட் போர்ட் மற்றும் ஹைடெக் லேப் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்படும் உணவுவை சாப்பிட்டு, அவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
அதன்பின்னர், விடுதி மாணவர்களை சந்தித்து, அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஆலோசனைகளை அவர்களுக்கு வழங்கினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பாராவ், குறிஞ்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.