ஊட்டி, நவ.21: நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் வரும் 28ம் தேதி துவங்கி டிசம்பர் 4-ம் தேதி வரை ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை முகாம் நடக்கிறது. மருத்துவம், ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல துணை இயக்குநர் (பொறுப்பு) சிவக்குமார் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் வரும் 21ம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை இருவார விழா அனுசரிக்கப்படுகிறது.
இதன்பேரில் வரும் 28ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெறும். இலவசமாக செய்யப்படும் இந்த ஆண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அரசின் சார்பாக ரூ.1100 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இதில் தகுதியுள்ள அனைத்து ஆண்களும் நவீன குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்டு பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0423-2443954, 97904 85521 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு துணை இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.