தர்மபுரி, பிப்.28: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை -மறுவாழ்வு மையத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ₹15.18 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 கலங்கரை ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார். தொடர்ந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில், கலெக்டர் சதீஷ் குத்துவிளக்கேற்றி வைத்து பார்வையிட்டார். இம்மையத்தில் ஒருங்கிணைந்த மனநல மருத்துவச் சேவைகளை வழங்க ஏற்படுத்தப்பட்டுள்ள உள்கட்டமைப்பு மற்றும் சேவை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, தர்மபுரி எம்பி ஆ.மணி, எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில், கலெக்டர் சதீஷ் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில், விரிவான ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு மாநில கொள்கையை வெளியிட்டார். இக்கொள்கையில், ஆதரவற்று பொது இடங்களில் உலாவும் மன நோயாளிகளை அடையாளம் கண்டு மீட்பது, அவர்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்திய அணுகுமுறை மற்றும் அரசு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் வழியாக, முழுமையான மனநல மருத்துவ சேவைகள் வழங்குவது தொடர்பான விரிவான வழிமுறைகளை தெளிவுபடுத்துகிறது. ஆதரவற்ற மனநோயர்கள் நோயில் இருந்து மீண்டு, நலம் பெற்று சமூகத்தில் மதிப்புமிகு உறுப்பினர்களாக வாழத் தேவையான திட்டங்களை உள்ளடக்கிய இக்கொள்கையை வெளியிடுவதன் மூலம், ஒருங்கிணைந்த மனநல மருத்துவ சேவைகளை வழங்கி, ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர் இல்லாத மாநிலமாக, தமிழ்நாட்டை திகழச் செய்ய அரசு உறுதியேற்றுள்ளது.
போதைப்பொருள் பயன்பாடு தனி மனிதரின் ஆரோக்கியத்திற்கும், குடும்ப நலத்திற்கும், சமூக வளர்ச்சிக்கும் பெரிய தடையாக உள்ளது. இத்தடையை உடைத்து, போதையில்லா சமுதாயத்தை உருவாக்க, போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்டு, சமூகத்தில் நலமுடன் வாழ தேவையான உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித கட்டணமும் இன்றி, போதை மீட்பிற்கான தொடர் சிகிச்சை வழங்கப்படுகிறது. போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் மற்றும் சேவைகள் வழங்க, குடும்பத்தினரின் முழு ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு வேண்டும்.இவ்வாறு கலெக்டர் சதீஷ் பேசினார்.
நிகழ்ச்சியில், எஸ்பி மகேஸ்வரன், அரசு தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, இணை இயக்குநர்(மருத்துவம்) சாந்தி, மருத்துவ கண்பாணிப்பாளர் சிவக்குமார், ஆர்எம்ஓ நாகேந்திரன், மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
அனைத்து ஏற்பாடுகளும் தயார்
இம்மையத்தில் மருத்துவர், ஆற்றுப்படுத்துநர், சமூகப் பணியாளர், செவிலியர், பாதுகாவலர், மருத்துவமனை பணியாளர், துப்புரவு பணியாளர் பணியமர்த்தப்பட்டு தரமான சிகிச்சை வழங்கப்படும். மருத்துவ சிகிச்சை மற்றும் உளவியல் சிகிச்சை முறைகள், மூச்சு பயிற்சி, உடற்பயிற்சி, பொழுதுபோக்கு வசதிகள், உள்ளரங்க விளையாட்டு குழு சிகிச்சை, குடும்பத்தினருக்கான ஆலோசனைகள் உள்ளிட்ட மறுவாழ்வு சேவைகளும் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.