கோவை, ஜூன் 16: கோவை கொடிசியா வளாகத்தில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவம் பயின்று தேர்ச்சி பெற்ற 144 பேருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர் கூறியதாவது, ‘‘இன்றைய தினம் மருத்துவப் பட்டம் பெற்ற இளம் மருத்துவர்கள் உலகம் போற்றும் மருத்துவர்களாக சிறந்து விளங்க வேண்டும்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளிப்படைத் தன்மையுடன் நிரப்பப்பட்டுள்ளன. பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களுக்கு பணி மாறுதல் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறை கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மெடிக்கல் போர்டு நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின் மருத்துவத் துறையில் சேவையற்ற உங்களை அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மருத்துவத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நல்வாழ்வு குழு திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ், கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.