திருவாடானை, நவ.10: திருவாடானை அருகே அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தடுப்பு மற்றும் விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. திருவாடானை அருகே பாரதி நகர் பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு தீத்தடுப்பு மற்றும் விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பள்ளி மாணவிகளுக்கு தீ விபத்து ஏற்படும்போது செய்யக் கூடிய அவசரகால தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீபாவளி நேரங்களில் பட்டாசுகளை எவ்வாறு கையாளுவது, முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். பிறகு செயல்விளக்கம் செய்து காண்பித்து அதன் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக தீயணைப்புத் துறையினர் திருவாடானை பேருந்து நிலையம், வாரச்சந்தை நடைபெறும் பகுதி மற்றும் சின்னக்கீரமங்கலம் ரவுண்டானா பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள கடை வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் தீத்தடுப்பு மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கியதோடு செயல் விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.