கோவை, மே 20: கோவையில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியினை விடுமுறை நாளான நேற்று முன்தினம் ஒரே நாளில் 11 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோவை வஉசி மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் கடந்த 1ம் தேதி முதல் அரசுப் பொருட்காட்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்பொருட்காட்சியானது தொடர்ந்து 45 நாட்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் இத்திட்டங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறையினை அணுகி அறிந்து கொள்ளும் வகையில் பொருட்காட்சி அமைந்துள்ளது. இப்பொருட்காட்சியில் 26 அரசுத்துறை அரங்குகளும், 7 அரசுசார்பு நிறுவனங்கள் அரங்குகளும் என மொத்தம் 33 அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பொதுமக்கள் அரசுப் பொருட்காட்சியினை காண நுழைவுகட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15ம், சிறியவர்களுக்கு ரூ.10ம் வசூலிக்கப்படுகிறது. நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் ஒரே நாளில் பெரியவர்கள் 9,442 பேரும், குழந்தைகள் 1937 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 379 பேர் கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அரசுக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சத்து 61 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது. கண்காட்சி தொடங்கப்பட்ட கடந்த 17 நாளில் மட்டும் 1 லட்சத்து 12 ஆயிரத்து 207 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்மூலம் அரசுக்கு ரூ.15 லட்சத்து 79 ஆயிரத்து 290 வருமானம் கிடைத்துள்ளதாக கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளனர்.