வேலூர், மே 27: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் காலவரையின்றி நீட்டிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் மற்றும் அரசு நிதியுதவி பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், இணைப்புக்கல்லூரிகளில் 20 ஆயிரத்து 635 டிப்ளமோ படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப்பதிவு இணைய வழியில் கடந்த மே 7ம் தேதி தொடங்கி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நேற்று முன்தினம் 25ம் தேதியுடன் முடிவடைந்தது. முதலாமாண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு 11,140 பேர் விண்ணப்பித்துள்ளனர்.