கலசபாக்கம், ஆக.4: கலசபாக்கம் அருகே நேற்று அதிகாலை அரசு பஸ் மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். போளூரில் இருந்து செங்கம் நோக்கி நேற்று அதிகாலை அரசு பஸ் பயணிகளுடன் புறப்பட்டது. அப்போது காங்கேயனூர் அருகே சென்ற போது செங்கத்தில் இருந்து போளூர் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி அரசு பஸ் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் மற்றும் லாரி சேதமானது. பஸ்ஸில் வந்த அருணகிரி மங்கலத்தைச் சேர்ந்த சத்யா(29), அவரது மகன் தீபக்(7) உள்ளிட்ட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கலசபாக்கம் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த 7 பேரையும் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், விபத்தில் காயமடைந்த சத்தியா, தீபக் இருவரும் உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.