வந்தவாசி, ஆக.1: வந்தவாசி அருகே அரசு பஸ் கண்ணாடியை பைக்கில் வந்த 2 பேர் உடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார்(48). இவர் போளூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு போளூரில் இருந்து வந்தவாசி வழியாக சென்னைக்கு செல்லும் அரசு பஸ்சை இயக்கினார். பஸ் சேத்துப்பட்டு- வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள ஆவணவாடி கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி பைக்கில் 2 வாலிபர்கள் சென்றனர். அதில், பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர் கல்லால் பஸ் கண்ணாடியை உடைத்தார். இதில், பஸ் முன்பக்க கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது. மேலும், டிரைவரை கல்லால் தாக்க முயன்றுள்ளார். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தியதால் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து குமார் பொன்னூர் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், எஸ்ஐ ஆனந்தன் வழக்குப்பதிந்து பஸ் கண்ணாடி உடைத்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.