பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா, கீழப்புலியூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சின்னபிள்ளை(57). இவர் கீழப் புலியூரிலிருந்து அரசு பேருந்தில் பெரம்பலூர் 4 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை 10.30 மணிக்கு வந்து மருத்துவரை பார்த்து சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் கீழப்புலியூர் செல்வதற்காக பழைய பேருந்து நிலையத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தார். 1 மணி நேரம் காத்திருந்து பின்பு 1.30 மணி அளவில் வைத்தியநாதபுரம் செல்லும் அரசு பேருந்தில் பின்புற படிக்கட்டில் கூட்ட நெரிசலில் ஏறும்போது, யாரோ பின் பகுதியில் இருந்து சேலையைப் பிடித்து இழுப்பது போல் உணர்ந்திருக்கிறார். மீண்டும் சேலையைப் பிடித்து யாரோ இழுப்பது போல் இருந்ததால் பேருந்தின் மேல் ஏறி தனது கழுத்தை பார்த்தபோது, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின் இல்லாததால் திடுக்கிட்டார். உடனே தனது செயினை காணவில்லை என கூச்சலிட்டுள்ளார். பின்பு பெரம்பலூர் போலீஸ் நிலையம் சென்று எஸ்.எஸ்.ஐ., பாண்டியனிடம் சின்னபிள்ளை புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயின் பறித்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.