பெரம்பலூர், நவ.17: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதிகளையும், தூய குடிநீர் வசதியையும் உறுதி படுத்திட வேண்டும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த, பட்டதாரி- முதுநிலைப் பட்ட தாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரான கி.மகேந்திரன் அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது :
நம்பள்ளி நம் பெருமை, அரசுப் பள்ளி வருமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளம் என்ற முழக்கங்களோடு, தான் பொறுப்பேற்ற நாள் முதல் பள்ளிக் கல்வித் துறையை அடுத்த பரிணாம வளர்ச்சிக்கு எடுத்து செல்ல உழைத்திடும் உன்னதமான பணிகளில், உயர்ந்த பணியான தமிழ் நாட்டின் 234 தொகுதிகளுக்கும் எவ்வித அறிவிப்புமின்றியும், பரபரப்புமின்றியும் பள்ளிகளை ஆய்வு செய்ய திட்டமிட்டு, தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி தொகுதியான திருவல்லிக் கேணியில் தொடங்கி, தமிழ்நாட்டின் பெருமையாம் நம் முதல்வர் தொகுதியான கொளத்தூரில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகிய தாங்கள் நிறைவு செய்துள்ளீர்.
இதுகாரும் கல்வித் துறையை சார்ந்த எந்த அமைச்சரும் செய்திடாத வரலாற்று சாதனையை மனதார பாராட்டி மகிழ்கிறோம். தமது பள்ளி பார்வைகளின் போது மாணவர்களோடு மாணவர்களாக அவர்களின் வழக்கு மொழியில் பேசி, வாசிப்புத் திறனையும், வாழ்க்கைச் சூழலையும், வளரும் பாங்கிளையும் அறிந்து கொண்டும், அங்குள்ள மாணவர்களது கழிப்பறை வசதிகளை நேரில் கள ஆய்வு செய்துள்ளதும், அது குறித்த மேம்பாட்டினையும் மேற்கொள்ள உள்ள எங்கள் பள்ளிக்கல்வி அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.
குறிப்பாக அரசுப் பள்ளி களில் மாணவர்களுக்கு சுகாதாரமான கழிப்பறை வசதிகளையும், தூய குடிநீர் வசதியையும் உறுதி படுத்திட உரிமையோடு வேண்டுகிறோம் என தமிழ் நாடு பட்டதாரி- முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரான கி.மகேந்திரன், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.