ஈரோடு, அக்.19: அரசு பள்ளி மாணவர்களுக்கான வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையிலும், கல்வி சாரா இணை செயல்பாடுகளை மேம்படுத்தவும், ஒன்றியம், மாவட்டம், மண்டலம், மாநில அளவிலான கலைத்திருவிழா என்ற பெயரில் பல்வேறு தனித்திறன் போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. நடனம், இசை, நாடகம் உள்ளிட்ட 67 வகையான போட்டிகளை நடத்திட உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகள் அளவிலான போட்டிகள் ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கிடையேயான இப்போட்டியில் முதல்நாளான நேற்று 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும், இன்று 19ம் தேதி 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கும், நாளை 20ம் தேதி மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் நடைபெற உள்ளது. வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடைபெற உள்ள கலைத்திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.