ஈரோடு, ஆக. 14: அரசு பள்ளி குழந்தைகளுக்கான சீருடைகளை தைக்கும் கூலியை உயர்த்தி வழங்க கோரி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஈரோடு அடுத்த சித்தோடு பகுதியை சேர்ந்த தொழில் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், ஈரோடு பெண்கள் தையல் தொழிலாளர்கள் நேற்று ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளி குழந்தைகளுக்கு சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் பள்ளி சீருடை துணிகளை பெற்று, தைத்து பள்ளி கல்வித்துறை மூலம் பள்ளி குழந்தைகளுக்கு விநியோகிக்கிறோம். சிறுவர்களுக்கான சிறிய டிரவுசர், சட்டை ஒரு செட் தைப்பதற்கான துணி, நூல் வழங்கி ரூ.36 கூலியாக வழங்குகின்றனர். இந்த கூலி பல ஆண்டாக உயர்த்தப்படவில்லை. ஆயத்தடை ஆடைகள் உற்பத்தி செய்யும் இடங்களில் மிக அதிக அளவில் கூலி வழங்கப்படும் நிலையில், இக்கூலியை உயர்த்தி வழங்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மேலும், நாங்கள் தைத்து தயார் நிலையில் வைத்துள்ள ஆடைகளை, நாங்களே பள்ளிகளுக்கு சென்று வழங்க வேண்டும் என வலியறுத்துகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் கொடுத்தால், அவர்களே அனுப்பிவிடுகின்றனர். அதேபோன்ற முறையை இங்கும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.