சாயல்குடி, ஆக. 18: முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் அரசு உயர்நிலை பள்ளியில் சுதந்திர தின விழா, பரிசளிப்பு விழா, 78 மரக்கன்று நடும்விழா என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு பஞ்சாயத்து தலைவர் பொற்கொடிகாயம்பூ தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் (பொ) கார்த்திகேயன் வரவேற்றார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டி உள்ளிட்டவற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இதில், 78வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக 78 மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து இளஞ்செம்பூர், பூக்குளம் கிராம மக்களுக்கு வீடுகளில் வளர்க்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ராணுவ வீரர்கள் சங்க சேதுசீமை, நிர்வாகி சந்திரசேகர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஆரோக்கியமேரி நன்றி கூறினார்.