கோவை, ஜன. 22: கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் ராமசாமி நகரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பொங்கலையொட்டி பள்ளிக்கு கடந்த 14ம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் வழக்கம்போல பள்ளி திறக்கப்பட்டது. அப்போது அங்குள்ள ஸ்டோர் ரூமின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே வைத்திருந்த கம்ப்யூட்டர் கீ போர்டுகள், சிபியூ, 3 மானிட்டர்கள் திருடு போயிருந்தது. பொங்கல் விடுமுறை தினத்தில் பள்ளி வளாகத்தில் நுழைந்த மர்மநபர் பூட்டை உடைத்து கம்ப்யூட்டர் உதிரிபாக பொருட்களை திருடி சென்றுள்ளார். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை முத்து ராஜம்மை கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் உதிரிபாகங்களை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.