தொண்டி, ஜூலை 16: தொண்டி மற்றும் சுற்று வட்டார பள்ளிகளில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுபானம் அருந்தி பாட்டிலை போட்டு உடைத்துச் செல்கின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு பள்ளிகளில் கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் சமூக விரோதிகள் வளாகங்களில் மதுபானம் அருந்தி விட்டு பாட்டில்களை போட்டு உடைத்துச் செல்கின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகனேந்தல் அரசு துவக்கப்பள்ளியில் அத்துமீறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. இதேபோல் பெரும்பாலான பள்ளிகளில் சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே நுழைந்து அடாவடி செய்து செல்கின்றனர். காலையில் வரும் ஆசிரியர்களுக்கு உடைந்த பாட்டில்களை சுத்தம் செய்வது கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியது, அரசு பள்ளிகளில் இரவு நேரங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் இரவு காவலர்களை நியமிக்க வேண்டும். சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் அல்லது போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். அரசு பள்ளிகளில் அத்து மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.