சங்ககிரி, ஆக. 3: சங்ககிரி ஒன்றியம், தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அரசு சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச வேன் வசதி தொடக்க விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி கல்வித்துறையின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிடையூர் மேட்டூர், புதூர் மேற்கு, ஓடக்காடு, எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட கிராம பகுதியை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் தினசரி பள்ளிக்கு வருகைதர வேன் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை வசந்தாள் தலைமை வகித்தார். சேலம் மேற்கு திமுக மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து, இலவச வேன் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிவகுமார், ஆசிரியர் பயிற்றுநர் மூர்த்தி, கணித பட்டதாரி ஆசிரியர் முருகன், ஆசிரியர்கள் சீனிவாசன், உமாமகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் சாரதா பழனியப்பன், ரமேஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.