கூடலூர்: நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட காலை சிற்றுண்டி வழங்கப்படும் 9 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு தேவையான அரிசி மளிகை உள்ளிட்ட உணவு பொருட்கள் பேரூராட்சி தலைவர் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது. நடுவட்டம், தெய்வமலை, டிஆர் பஜார், இந்திராநகர், அப்பர்ப்ராஸ்பெக்ட், அனுமாபுரம், பைக்காரா, ஊக்கர், ஆசிங்டன் ஆகிய பள்ளிகளில் இங்குள்ள தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் படித்து வருகின்றனர். தமிழக முதல்வரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் மிகப்பெரும் உதவியாக அமைந்துள்ளது. இப்பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டிக்கு ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்களை நடுவட்டம் பேரூராட்சி தலைவர் கலியபெருமாள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் ஆசிரியர்களிடம் இலவசமாக வழங்கினார்.