வேலூர், அக்.25: வேலூர் மாவட்டத்தில் விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் 92 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, தனியார் பள்ளிகளைப் போலவே ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் எல்கேஜி, யுகேஜி மற்றும் 1ம் வகுப்பு முதல் 5ம் வரை உள்ள வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று விஜயதசமி நாளில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்திட தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டது. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பள்ளிகளுக்கு சென்று மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை காலை முதலே தொடங்கியது. விஜயதசமி நாளில் குழந்தைகளுக்கான கல்வியை தொடங்கினால் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் என்ற நம்பிக்கையால் பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டினர். அதன்படி மாவட்டம் முழுவதும் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை மொத்தம் 92 மாணவ, மாணவிகள் பள்ளியில் சேர்க்கை நடந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.