தர்மபுரி, செப்.4: தர்மபுரி அருகே அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு தயாரிக்கும் பணியை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தர்மபுரி மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கலெக்டர் சாந்தி தொடக்கப்பள்ளிகளுக்கு நேரில் சென்று அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார். நேற்று முன்தினம், ஏரியூர் ஒன்றியம் கோடிஅள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து, கலெக்டர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதே போல், நல்லம்பள்ளி அருகே தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, அவ்வை நகர், தடங்கம் ஆகிய 4 அரசு பள்ளிகளில், காலை உணவு திட்டத்தின் மூலம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் பணியை, கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சமையல் கூடத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமாக உணவு தயார் செய்து வழங்க வேண்டும். துறை அலுவலர்களை தவிர வெளி ஆட்களை உணவு தயாரிப்பு கூடத்தில் அனுமதிக்க கூடாது என கலெக்டர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், லோகநாதன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.