திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் ஆய்வு செய்திட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நன்னிலத்தில் நேற்று மாவட்ட துணை தலைவர் சுர்ஜித் தலைமையில் நடைப்பெற்றது. முன்னாள் மாநில துணை செயலாளர் பிரகாஷ் துவக்கி வைத்து பேசினார். இதில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும், அனைத்து மாணவர் விடுதிகளில் உணவு மற்றும் இதர பிரச்னைகள் குறித்து துறை வாரியாக ஆய்வு நடத்த வேண்டும். குடவாசல் கல்லூரி குடவாசல் பேரூராட்சி பகுதியிலே அமைவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். கூத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் கல்லூரியில் இடநெருக்கடி காரணமாக மாணவிகள் பாதிக்கப்பட்டு வருவதால் உடனடியாக மாற்று இடத்தில் கல்லூரி இயங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் 31 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டதில் புதிய மாவட்ட தலைவராக சுர்ஜித், மாவட்ட செயலாளராக ஆனந்த் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபட்டனர். மாநில துணை செயலாளர் ஜனார்த்தனன் நன்றி கூறினார்.