நாகர்கோவில், அக்.7: தமிழ்நாடு அரசு பணியாளர்களின் குழந்தைகளுடைய கல்விக்கான முன்பணம் அனுமதிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி கல்வி முன்பணம் விண்ணப்ப படிவம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கல்வி முன்பணம் கோரி அனுப்பி வைக்கப்படும் படிவத்தில் உரிய அலுவலர்களின் ஒப்புதல்கள் பெற்று படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலரின் பரிந்துரையுடன் உரிய வழியாக இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்கக நிதி கட்டுப்பாட்டு அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி நவம்பர் 30ம் தேதிக்குள் முதன்மை கல்வி அலுவலர்கள் விண்ணப்பங்களை பெற்று அனுப்ப வேண்டும் என்றும், பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய தொகை அரசிடம் இருந்து கோரி பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுற்றறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.