திருவாரூர், செப். 6: திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அரசு துறையினரும் ஒன்றிணைந்து முன்னேற்பாடு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இதில் கலெக்டர் சாரு பேசியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது மாவட்டத்தில் பாதிக்க கூடிய பகுதிகளை முன்கூட்டியே ஆய்வு செய்து, அதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு வருவதற்கான அனைத்து வசதிகள், தங்க வைப்பதற்கான முகாம்கள் பாதுகாப்பாக உள்ளனவா?, போதிய வசதிகள் இருக்கின்றனவா? என்பதை அலுவலர்கள் இப்போதே ஆய்வு செய்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். முகாமில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு குடிநீர், உணவு உடனடியாக கிடைக்கும் வகையில் உணவுப் பொருட்களின் இருப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். தேவையான இடத்தில் மின்சார வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மழைநீர் தேங்கும் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்ற மோட்டார் பம்புகளை தயார்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சாலைகளில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்த தேவையான மரம் அறுக்கும் இயந்திரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.
தன்னார்வலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். பாம்புகடி உட்பட அனைத்து மருந்துகளையும் மருத்துவ துறையினர் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எந்த பேரிடர் நிலைமையையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் சாரு பேசினார். இக்கூட்டத்தில் டி.ஆர்.ஓ. சண்முகநாதன், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், உதவி காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கயல்விழி, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மோகன்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் லதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.