கடலூர், அக். 27: கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலை கல்லூரி உள்ளது. இங்கு சுமார் 6000 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது மாணவர்கள் கூறுகையில், கல்லூரி நேரத்திற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படாததால் நாங்கள் இங்கு காத்திருக்கிறோம், கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த அரசு போக்குவரத்து கழக கடலூர் மாவட்ட பொது மேலாளர் ராஜா தலைமையில், கிளை மேலாளர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் நேற்று அந்த பஸ் நிறுத்தத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன் விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு முன்பு, கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 6 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. பின்னர் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தினந்தோறும் 26 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதாவது காலை 8.10 மணி முதல் 9.40 வரை பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு 26 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பின்னர் கல்லூரியில் இருந்து இந்த பஸ் நிறுத்தத்துக்கு 4 முறை பேருந்துகள் இயக்கப்படுகிறது. மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை 12 பேருந்துகளும், மாலை 4.30 முதல் 5.30 வரை கல்லூரியில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்ல 6 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. எனவே போக்குவரத்து கழகத்தில் இருந்து தேவையான அளவுக்கு கல்லூரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் சில மாணவர்கள் அந்த பேருந்துகளில் ஏறாமல் காத்திருக்கின்றனர். அவர்களும் பேருந்துகளில் ஏறி சென்றால் எந்த பிரச்னையும் இருக்காது, என்றனர்.