திருவண்ணாமலை, ஆக.19: பல்கலைக்கழக தேர்வில் குறைவான மதிப்பெண்கள் வழங்கியதாக தெரிவித்து, திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்களின் பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில், நன்றாக தேர்வு எழுதிய சில மாணவர்களின் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேர்வு எழுதாத பாடத்தில் தேர்ச்சி பெற்றதாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது. எனவே, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் முறையாக விடைத்தாள் திருத்தவில்லை, அதனால் மதிப்பெண்கள் குறைந்ததாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், ஒற்றை இலக்கில் மதிப்பெண் வழங்கியிருப்பதால், மீண்டும் விடைத்தாள்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்து திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கல்லூரியில் போதுமான அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும், கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கல்லூரி நேரத்திற்கு பஸ் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும், இருக்கை வசதியில்லாததால் தரையில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளதால், உரிய வசதிகளை செய்துத்தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். அதைத்தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர்களிடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.