புதுச்சேரி, ஜூலை 4: புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான இடங்களுக்கு கடந்த 29ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் நேற்று சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் 2 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். புதுச்சேரியில் 3 அரசு செவிலியர் கல்லூரிகளில் 146 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 400 என மொத்தமாக 546 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை சென்டாக் மூலம் நிரப்புவதற்காக சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஜூன் 29ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. புதுவை-5, காரைக்கால்-2, மாகே-1, ஏனாம்-1 என 9 மையங்களில் தேர்வு நடந்தது.
இத்தேர்வு எழுத 2,212 பேர் விண்ணப்பித்த நிலையில் 1,876 பேர் (84.81%) கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மாணவர்கள் ஹேமன் ஸ்வஸ்திக், சுபி ஆகியோர் 89 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். கேஷெர்னி, பார்வதி அணில் ஆகியோர் 88 மதிப்பெண் பெற்று 2வது இடத்தையும், யுவபிரியா 87 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். இத்தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக பொதுப்பிரிவினருக்கு 50 சதவீதமும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு 40 சதவீதமும், பொது பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 45 சதவீதமும், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 40 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வில் ஒரே மதிப்பெண் (டை பிரேக்) பெற்றவர்களுக்கு பகுதி-3 இளங்கலை தொழில்முறை படிப்புகள், உயிரியல் சார்ந்த படிப்புகள் மற்றும் டிப்ளமோ படிப்புகளின் தகவல் சிற்றேட்டில் (2025-26) குறிப்பிட்டுள்ள முறையின் படி முன்னுரிமை வரிசை பின்பற்றப்படுகிறது. மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு மதிப்பெண், சாதி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்களின் சரிபார்ப்புக்கு உட்பட்டது. இத்தகவலை சுகாதாரத்துறை இயக்குநரும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியுமான ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.