சிவகங்கை, பிப். 19: சிவகங்கை மாவட்டத்தில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரியும் போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியம் குறித்து ஆய்வு செய்ய அமைத்துள்ள குழுவை கலைத்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். காளையார்கோவில், இளையான்குடி, கல்லல், காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, திருப்புவனம், சாக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு அரசு அலுவலகங்களிலும் அரசு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் குணசேகரன், பாலகிருஷ்ணன், பிச்சை, முருகன், மாரிமுத்து, செல்வம், அன்பரசன், காளிமுத்து, சேவுகமூர்த்தி, அம்பிகா, இளஞ்செழியன், செந்தில்நாதன் ஆகியோர் தலைமையில் வீரமணி, திருஞானம், களஞ்சியம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.