சேலம், செப்.2: சேலத்தில் கருவூலத்துறையை கண்டித்து அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். அரசு ஊழியர்கள் தங்களது விடுப்புகள், ஜிபிஎப் விண்ணப்பங்களை களஞ்சியம் செல்போன் ஆப் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. இது அரசு விதிகளுக்கு முரணானது. மேலும் ஊதியம் வழங்கும் அலுவலர்களை, அதிகாரமற்றவர்களாக மாற்றும் முயற்சியாகும்.
எனவே, களஞ்சியம் செல்போன் ஆப் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் ஜெகதீஸ்வரி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்க மாவட்ட தலைவர் சந்திரசேகரன், கல்வித்துறை நிர்வாகி பூங்கோதை, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல், தம்மம்பட்டி, ஆரியபாளையம், ஏத்தாப்பூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.